ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு ஏன் ?? தமிழக அரசு விளக்கம்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு ஏன் ?? தமிழக அரசு விளக்கம்

Update: 2019-08-18 08:44 GMT

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசு அதை மக்கள் மீது சுமத்தும் வண்ணம் லிட்டருக்கு ரூ.6 -க்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:


“பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.


பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும்,கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 இலட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு,போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும்.


இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு திங்கட்கிழமை (19.08.2019) முதல் அமலுக்கு வரும்”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News