அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸில் தீவிர சிகிச்சை: மோடி, அமித்ஷா நேரில் சென்று நலம் விசாரிப்பு !!
அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸில் தீவிர சிகிச்சை: மோடி, அமித்ஷா நேரில் சென்று நலம் விசாரிப்பு !!
பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதயத்துடிப்பு சீராக இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்துக்கான சிறப்பு மருத்துவர், இதயநோய் நிபுணர் உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, சர்க்கரை நோய் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ஜெட்லி, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அடிக்கடி ஜெட்லி அமெரிக்கா சென்று வந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்கூட ஜெட்லி போட்டியிடவில்லை. மக்களவைத் தேர்தலில் வென்று பாஜ மீண்டும் ஆட்சியமைத்த போது, உடல்நலக் குறைவு காரணமாக எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள இயலாது என பிரதமர் மோடிக்கு கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜெட்லிக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து காண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவர்களிடம் ஜெட்லியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர்.