மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள் மோடி பெருமிதம் ! தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்!
மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள் மோடி பெருமிதம் ! தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்!
தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, திருக்குறள் புனிதநூலாக மட்டுமின்றி, மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆசியான் மாநாட்டிற்காக தாய்லாந்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் ஸ்வாசதி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழில் வணக்கம், இந்தியில் நமஸ்கார் என்று கூறி பேச்சை தொடங்கினார்.
இந்தியா- தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளதாகவும், இருநாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை என்றும் மோடி குறிப்பிட்டார். தாய்லாந்தில் தாம் இருப்பது தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
ஒருசிலர் தாம் பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்ற போதிலும், யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் தம்மை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
தமது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், 130 கோடி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும், சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 550-வது பிறந்தநாள் சிறப்பு நாணயத்தையும் அதே மேடையில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
நான்காண்டுகளுக்கு (2015) முன்பு திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பை தாம் வெளியிட்டதாக குறிப்பிட்டமோடி, தாய் மொழியிலும் வெளியிடும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். திருக்குறள் புனிதநூலாக மட்டுமின்றி, மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாகவும் தமது பேச்சில் மோடி குறிப்பிட்டார்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இன்றும் பொருத்தமுடையதாக உள்ளதாகவும், உலக மக்கள் அனைவரும் பயனடையும் கருத்துக்கள் இந்நூலில் இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.