₹250 கோடியில் அமைய உள்ள புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகளுக்காக பாம்பனில் ஆய்வு!

₹250 கோடியில் அமைய உள்ள புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகளுக்காக பாம்பனில் ஆய்வு!

Update: 2019-10-30 03:49 GMT

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தபடி ₹250 கோடியில் அமைய உள்ள புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகளுக்காக பாம்பனில் நேற்று ரயில்வே போர்டு சேர்மன் யாதவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், ₹250 கோடி செலவில் இரட்டை வழித்தடத்துடன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கவுள்ளது. கடலில் புதிய பாலம் கட்டுவதற்கான அனைத்து ஆய்வுகளும் முடிக்கப்பட்ட நிலையில், குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடலில் அமையவுள்ள பாலம் கட்டுவதற்கான இறுதிக்கட்ட சர்வேயில் ஈடுபட்டு வருகின்றனர்.


மண்டபம் ரயில் நிலையம் அருகிலுள்ள இடத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் பொறியாளர்கள், ஊழியர்கள், கட்டுமான பொருட்கள் சேமித்து வைப்பதற்கான அறைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாலம் கட்டும் பணி துவங்க உள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திற்கு வந்த ரயில்வே போர்டு சேர்மன் வி.கே.யாதவ், பாம்பன் கடலில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பாலத்தை பார்வையிட்டு, கடலில் கட்டப்படும் புதிய பாலம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.


பின்னர் அவர், தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த கட்டிடங்களுடன் காட்சியளிக்கும் பழைய ரயில்வே ஸ்டேசன் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு புதிய ரயில் நிலையம் அமையும் இடத்தை ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ₹150 கோடி செலவில் துவக்க உள்ள மின்சார ரயில் போக்குவரத்து பணிகள் துவங்குவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். ஆய்வின்போது, ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் உட்பட தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Similar News