இந்திய மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்த மோடி அரசு: பாராட்டும் உலக நாடுகள்!
அனைவருக்காகவும், அனைவரது வளர்ச்சி என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் செயலாக்கத்தில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை எட்டியுள்ளது. இது உலகளவில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டில் 19சதவீதமாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 64.3%சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளைவிட 45 சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் ஒரு பகுதியாக, அதன் தலைமை இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹவுங்போவுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட ஏழை மக்களின் மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள தேசிய அளவிலான சமூகப் பாதுகாப்பு தரவு தொகுப்புப் பயிற்சி குறித்தும் மத்திய அமைச்சர் அவரிடம் விளக்கி கூறினார். மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இணையதள பக்கத்தில் 94 கோடிக்கும் அதிகமான மக்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் நன்மைகளை பெற்றுள்ளது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் 94 கோடி குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குகின்றன.