எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை! நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் கருத்து!

எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை! நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் கருத்து!

Update: 2019-11-09 11:03 GMT


அயோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை. எனினும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால் சமாதானம் அடைகிறோம் என நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அதேசமயம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரி தாக்கல் செய்த நிர்மோகி அகாராவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை. எனினும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால் சமாதானம் அடைகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.


Similar News