தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

Update: 2019-10-16 11:11 GMT


இந்தியாவிலேயே வடகிழக்கு பருவமழை மூலம் அதிக பயன் பெரும் மாநிலம் நம் தமிழகம்தான். தமிழகத்துக் கென்றே வருணபகவானால் உருவாக்கப்படும் இந்த மழை மட்டும் பொய்த்து விட்டால் தமிழகத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்படும்.


இந்த நிலையில் வரும் வியாழன் இரவு அல்லது வெள்ளிக் கிழமை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை முந்திக் கொண்டு நேற்று செவ்வாய் கிழமை அதிகாலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.    


தற்போது தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட திருவள்ளூர், காஞ்சிபுரம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புண்டு என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.


இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லி பகுதிகளில் 11 சென்டி மீட்டர் மழையும், பாம்பனில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அம்பத்தூர், ஆவடி உட்பட மாநகரப் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் வரை தொடர்ச்சியாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகத்துக்கு சிறப்பான அளவில் மழை பொழிவை தந்துள்ள நிலையில், அது முடிந்த ஒரு மாதத்துக்குள் வடகிழக்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 17, 18 ஆகிய தேதிகளில் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. .


Similar News