விக்ரம் லேண்டரை விடுவதாக இல்லை! சந்திரயான் 2 ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முடிவு!!

விக்ரம் லேண்டரை விடுவதாக இல்லை! சந்திரயான் 2 ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முடிவு!!

Update: 2019-09-09 07:58 GMT


நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி அனுப்பியது. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம்.


விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. சந்திரனில் இருந்து 35 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருந்த 1,471 கிலோ எடை கொண்ட லேண்டரை நிலவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.


நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது, லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. என்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.


அதே நேரம், ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கி.மீ. தொலைவில்  தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளன. இது, விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ளதை கண்டு பிடித்து உள்ளது.


இதனைத்தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில், 100 கி.மீ. தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் தொலைவை 50 கி.மீயாக குறைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.


இதன் மூலம், விக்ரம் லேண்டர் பற்றிய கூடுதல் தகவல்களை ஆர்பிட்டர் அளிக்க முடியும். அதேபோல லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தவும் அது உதவியாக இருக்கும்.


நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 நாட்கள்தான். அதாவது நிலவில் அது ஒரு பகல் பொழுது. எனவே லேண்டர் தற்போது உள்ள நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி படும். ஏற்கனவே 2 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 12 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளி படும்.


ஒருவேளை லேண்டர் நிலவில் தரையிறங்கியபோது நொறுங்காமல் இருந்து அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்படும் நிலையில் இருந்தால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



Similar News