இந்தியாவுக்கு எதிராக கருத்து: பாகிஸ்தானில் 200 கணக்குகளை முடக்கியது ட்விட்டர் - மேலிடம் வரை ஆட்டம் காணும் நிர்வாகம்!
இந்தியாவுக்கு எதிராக கருத்து: பாகிஸ்தானில் 200 கணக்குகளை முடக்கியது ட்விட்டர் - மேலிடம் வரை ஆட்டம் காணும் நிர்வாகம்!
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 200 பேரின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்த 200 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, அதற்கான காரணத்தை விளக்கக் கோரி கேட்டுள்ளதாக அந்த நாட்டில் இருந்து வெளியாகும் டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவையும், ரயில், பேருந்து போக்குவரத்தையும் ரத்து செய்தது.
இதனிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவாக அந்நாட்டு மக்கள் பலர் ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.குறிப்பாக பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் ஆகியோர் காஷ்மீருக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்காக ##StopSuspendingPakistanis என்ற டேக் லைனையும் உருவாக்கி ட்ரண்டாக்கினர்.
ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்த 200 பேரின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நடவடிக்கை எடுத்துள்ளது.