“உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமை சேர்த்துள்ளது” - பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை இஸ்ரோவுக்கு பாராட்டு!!
“உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமை சேர்த்துள்ளது” - பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை இஸ்ரோவுக்கு பாராட்டு!!
சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் 95 சதவீதம் வெற்றி அடைந்தாலும், தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எங்கு உள்ளது என்பது கண்டறியப்பட்டது. அது சேதம் ஆகாமல் உள்ளதாகவும், அதனை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரித்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து விண்வெளிக்கு செல்ல முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமீரா சலீம், விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கச் செய்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சிக்காக இந்தியாவையும், இஸ்ரோவையும் பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டரை தரையிறக்கும் வரலாற்று முயற்சிக்காக இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். சந்திரயான் 2 திட்டம் உண்மையிலேயே மிகப்பெரிய துணிச்சலான செயல். இது, தெற்கு ஆசியாவுக்கு மட்டுமல்ல, உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமை சேர்த்துள்ளது.
தெற்கு ஆசியாவின் விண்வெளித் துறையில், ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் எந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது முக்கியம் அல்ல. அனைத்து அரசியல் எல்லைகளையும் மறந்து விடுங்கள். பூமியில் எது நம்மை பிரிக்கிறது என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு, விண்வெளியில் எது நம்மை ஒன்றிணைக்கிறது என்று பாருங்கள்.
இவ்வாறு நமிரா சலீம் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சினை இருந்துவரும் நிலையில், பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம், இந்தியாவின் சந்திரயான்2 திட்டத்தையும், இஸ்ரோவையும் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நமீரா சலீமை பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.