இந்தியாவிடம் அடைக்கலம் கேட்கும் பாகிஸ்தான் எம்.எல்.ஏ! பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்கிறார்!!

இந்தியாவிடம் அடைக்கலம் கேட்கும் பாகிஸ்தான் எம்.எல்.ஏ! பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்கிறார்!!

Update: 2019-09-10 12:40 GMT


பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பல்தேவ் குமார். சீக்கியரான இவர், கைபர் பாக்துங்வா மாகாணத்தின் பரிகோட் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.


இவர், இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு மூன்று மாத விசாவில் வந்துள்ளார். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாததால், மீண்டும் பாகிஸ்தான் செல்ல அச்சப்படுகிறார்.


இதனால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்தியா தஞ்சம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-


பாகிஸ்தானில் முஸ்லிம்களைத் தவிர சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினரை பாதுகாக்க பிரதமர் இம்ரான் கான் தவறிவிட்டார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ அமைப்பும் இம்ரான் கானுக்கு உத்தரவிட்டு அதன்படி செயல்பட வைக்கின்றன.


சீக்கிய மதகுருவின் மகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டபிறகு, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். மதத் தலைவர்களே அங்கு மதிக்கப்படவில்லை.


எனவே இனி நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு அடைக்கலம் தருவார் என நம்புகிறேன். இது தொடர்பாக முறைப்படி மனு அளிக்க உள்ளேன்.


பல்தேவ் குமார், பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கன்னா பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.  


இவரது மனைவி பாவனா, கன்னா பகுதியைச் சேர்ந்தவர். இவர்களின் திருமணம் 2007-ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


பாவனாவுக்கு இந்திய குடியுரிமை உள்ளது. ஆனால் பல்தேவ் குமாருக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் பாகிஸ்தான் குடியுரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News