டால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது!!

டால்டாவுடன் பாமாயில், கடுகு எண்ணெய் கலந்து ஊத்துக்குளி வெண்ணெய் பெயரில் கோவில்களுக்கு விற்பனை: சைதாப்பேட்டையை சேர்ந்த கும்பல் கைது!!

Update: 2019-08-17 05:55 GMT

ஊத்துக்குளி வெண்ணை என்ற பெயரில் ஒரு சொட்டு பால்பொருள் கூட கலக்காமல் வனஸ்பதியை பாம் ஆயிலுடன் கலந்து போலியாக வெண்ணை தயாரித்து வந்த கும்பல் சென்னையில் சிக்கி உள்ளது. போலி வெண்ணை கிலோ கணக்கில் ஆஞ்சநேயர் அபிசேகத்துக்கு அனுப்பபட்ட பின்னணி குறித்தும் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...


வெண்ணைக்கு புகழ் பெற்ற ஊத்துக்குழி பெயரை பயன்படுத்தி சென்னையில் போலி வெண்ணை உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த கலப்பட வெண்ணை ஆலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!


சைதாப்பேட்டை காவேரி நகரில் உள்ள வீடுகளில் போலியாக வெண்ணை தயாரிக்கப்பட்டு கோவில்களுக்கும், மளிகை கடைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உணவு பொருள் பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள வெண்ணை தயாரிக்கும் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.


வெண்ணைக்கு பெயர் பெற்ற ஊத்துக்குழி பகுதியில் தயாரிக்கப்படுவதாக போலி லேபிளிட்டு டப்பாக்களிலும் ,பாக்கெட்டுகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணை டப்பாக்களை சோதனையிட்ட போது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.


ஒரிஜினல் நெய் என்பது, பாலில் இருந்து தயிரை பிரித்து, தயிரை கடைந்து வெண்ணை எடுத்து அதனை உருக்கி நெய்யாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதுதான. இங்குள்ள போலி வெண்ணை ஆலைகளில் ஒரு சொட்டு பால் பொருள் கூட கலக்காமல் இந்த போலியான நெய் ப்ரெஷ்சாக தயாரிக்கப்படுகின்றது.


அதாவது தரம் குறைந்த பாம் ஆயிலுடன், மட்டமான வனஸ்பதியை கலந்து அதில் கடுகு எண்ணையை சிறிதளவு சேர்த்து சுத்தமான நெய் என்று லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனை மங்கையரின் மகத்தான தீர்வு..! என்றும், அருசுவைகளின் மேலும் ஒரு சுவை..! என்றும் லேபில்களில் குறிப்பிட்டு மக்களை வாங்கிச்சாப்பிட வைக்கின்றனர்.


இந்த கலப்பட வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால் பயன்படுத்துவோருக்கு எளிதில் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மக்களை மட்டுமல்ல இந்த கும்பல் கோவில் நிர்வாகங்களையும் ஏமாற்றி வந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


அதிகாரிகள் சோதனையின் போது சிக்கிய உறப்த்தியாளர் ஒருவர், உணவில் சேர்த்து உண்பதற்கு இந்த வெண்ணை தயாரிக்கபடவில்லை என்றும் நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை அபிசேகம் செய்யவும் மட்டுமே இந்த வெண்ணை டப்பாக்கள் அனுப்பப்படுவதாக தெரிவித்தார்


பக்தர்கள் மத்தியில் பிரபலமான மயிலாப்பூர் ஆஞ்சநேயருக்கே வெண்ணை என்ற பெயரில் போலியான எண்ணைய் கலவையை அபிசேகத்திற்கு அனுப்பி மோசடி செய்திருப்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு மட்டுமல்ல பெரும்பாலான கோவில்களில் நெய் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் வெண்ணை100 சதவீதம் போலியானது என்பதையும் அவர்களே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.


ஒரே நாளில் 12 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 300 கிலோ எடையுள்ள போலி வெண்ணை டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விநாயகர் சதூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளில் வெண்ணை பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற கலப்பட வெண்ணையை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் அனைத்து வெண்ணை டப்பாக்களில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. ஆய்வு மூலம் கலப்படம் உறுதிப்படுத்தப்படும் படசத்தில் உணவு கலப்பட தடுப்புச்சட்டம் 59 வது சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு கலப்படம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News