ஒரு சொட்டு தண்ணீர் கூட கலக்கப்படாத பழனி பஞ்சாமிர்தம் : சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
ஒரு சொட்டு தண்ணீர் கூட கலக்கப்படாத பழனி பஞ்சாமிர்தம் : சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
மீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.
புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. மலை வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு ருசி அதிகரிக்கப்படுகிறது.
பழனி பஞ்சாமிர்தம்:
தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. ஏனெனில் சுத்தமான பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால்கூட கெட்டு போய்விடும் தன்மை கொண்டது. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு அறிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு:
பொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.