காஷ்மீரில் அமைதி திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்!! பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேச்சு!!

காஷ்மீரில் அமைதி திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்!! பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேச்சு!!

Update: 2019-08-09 08:35 GMT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் என்றும், விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் இருந்ததால், காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழல்கள்தான் இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது காஷ்மீரின் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.



மத்திய அரசு உருவாக்கும் சட்டம் நாடு முழுவதும் பலன் தரவேண்டும் என்றும், ஆனால், இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் கிடைக்கவில்லை என்றும் கூறிய மோடி, காஷ்மீர் மக்களுக்கு மற்ற மாநில மக்களுக்குப் போல், பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களும், எய்ம்ஸ் மருத்துவமனையும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய மோடி, காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என குறிப்பிட்ட அவர், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.


Similar News