நனவானது ஷியாம பிரசாத் முகர்ஜியின் “ஒரே இந்தியா” கனவு
நனவானது ஷியாம பிரசாத் முகர்ஜியின் “ஒரே இந்தியா” கனவு
காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய மோடி அரசு ரத்து செய்தது. நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை பற்றி ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு மைய இயக்குனர் அனிர்பன் கங்குலி எழுதிய கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு முறை காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம், ‛‛இந்திய தேசிய கொடிக்கு மரியாதை கொடுப்பீர்களா'' என சிலர் கேட்டனர். அதற்கு அவர், ‛‛அப்படியா, அந்தக் கொடியை நாங்கள் அங்கீகரிப்போம்'' என்று வேறு ஏதோ கொடியைப் பற்றி சொல்வதுபோல் பதில் அளித்தார்.
ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்த ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி காதுகளுக்கு அப்துல்லா கூறியது எட்டியது. பார்லிமென்டில் முழங்கிய அவர், ‛‛யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொடி இருக்கும். அது தான் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடி'' என்றார்.
இதற்கு பதில் அளித்த ஷேக் அப்துல்லா, ‛‛இரு கொடிகளையும் (காஷ்மீருக்கு என்று தனி கொடி இருந்தது) நாங்கள் சமமாக மதிப்போம்'' என்றார்.
‛‛நீங்கள் இரு கொடிகளையும் சமமாக நடத்த முடியாது. தேசிய கொடி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. அந்த நாட்டுக்கு உட்பட்டது தான் காஷ்மீரும்'' என்று முகர்ஜி கர்ஜித்தார்.
370-ஐ நீக்காவிட்டால் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் என நம்பினார் முகர்ஜி. ஆனால் நேருவுக்கும் அப்துல்லாவுக்கும் இருந்த நெருக்கத்தால் அவரது கனவு தள்ளிப்போனது. சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டு ஸ்ரீநகரில் இறந்தார். இறக்கும்வரை ஒரே தேசம் என்ற கோஷத்தை முன்வைத்தபடி இருந்தார்.