இந்த காலத்தில் இப்படியொரு இளைஞர்களா? தேனியில் விதைக்கப்பட்ட முன்முயற்சி - தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்த 'ஆணி பிடுங்கும் திருவிழா'
இந்த காலத்தில் இப்படியொரு இளைஞர்களா? தேனியில் விதைக்கப்பட்ட முன்முயற்சி - தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்த 'ஆணி பிடுங்கும் திருவிழா'
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் குழுவினர் திருவிழா நடத்தினர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை செய்து வருகிறான். அதில் ஒன்று தன் சுயலாபத்திற்காக நிழல் தரும் மரங்கள் மீது ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகளை மாட்டுவது. மரத்தில் ஆணி அடித்தால் மரத்திற்கு வேரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தடைபடுவதோடு மரத்தின் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைகின்றது.
எனவே இதனை தடுக்க இளைஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த இளைஞர் குழு ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி நகர் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை இவர்கள் பிடுங்கியுள்ளனர். ஆணிகளை எடுத்த பின்பு மஞ்சள், வேப்ப எண்ணெய்யை கலந்து ஆணி எடுத்த இடத்தில் வைத்து விடுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் அந்த மரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் விரைவில் சரியாகிவிடும் என அவர்கள் கூறுகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இப்பணியினை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இளைஞர் குழு மேற்கொள்கிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள மரங்களில் ஆணிகளே இல்லாத நிலையை விரைவில் உருவாக்குவதே இலக்காக வைத்துள்ள இவர்கள், இதற்கு முன்னதாக பனை நடவு - 2019 என்ற இயக்கத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் 18 நீர்நிலைகளில் 40ஆயிரம் பனை விதைகளை நட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.