மக்களின் மகிழ்ச்சியை இலட்சியமாகக் கொண்ட ஸ்ரீ கண்ணனின் பிறந்த நாள் இன்று: மதிப்போம் ..துதிப்போம் ..அவன் வழி நடப்போம்!!
மக்களின் மகிழ்ச்சியை இலட்சியமாகக் கொண்ட ஸ்ரீ கண்ணனின் பிறந்த நாள் இன்று: மதிப்போம் ..துதிப்போம் ..அவன் வழி நடப்போம்!!
பிறருக்காக வாழ்வதே நம் வாழ்வியல் கடமை என்று உலகுக்கு உணர்த்திய ஸ்ரீ கண்ணன் தோன்றிய இந்த ‘கோகுலாஷ்டமி’ நாள்தான் உண்மையிலேயே உலக குழந்தைகள் நாள். தீபாவளி என்றாலே அந்த நாள் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் நாளாக உள்ளது. அதுபோல கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு காலத்தில் வைணவக் குடும்ப குழந்தைகளுக்கு மட்டும் மிகவும் சந்தோஷமான நாளாக இருந்தது. ஆனால் இன்று அனைவரும் ஒருமித்த இந்துக்களாகத் திகழும் இந்த காலக் கட்டத்தில் அனைவரும் திருப்பதியும் செல்கிறோம், திருவண்ணாமலையும் செல்கிறோம். இப்போது எல்லாக் குடும்பங்களுமே பிள்ளையார் சதுர்த்தியைப் போல கிருஷ்ண ஜெயந்தியையும் கொண்டாடத் தொடங்கிவிட்டோம். இன்று பேதமில்லாமல் அனைவரும் கண்ணா...கண்ணா... என்று மனமுருகத் தொடங்கிவிட்டோம். இதுதான் நாம் பெற்றுள்ள சிறந்த வெற்றி. நம் கண்ணனின் சிறப்புக்களை காண்போம்:
கோகுலாஷ்டமி ஏன்?
அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்.
தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை.
கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை“கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.