மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!
மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!
அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தில் மாணவ போராளியாக இருந்தார். அதன்பிறகு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தார்.
இந்திரா காந்தி ஆட்சியில் 1975 - 77 காலக்கட்டத்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது, ஜெட்லி சிறைவாசம் சென்றார். 1977ல் லோக்தந்திரிக் யுவ மோர்ச்சாவில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அப்போது டெல்லி ஏபிவிபி-க்கு தலைவராகவும், ஏபிவிபி-யின் அகில இந்திய செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அருண் ஜெட்லி, 1980-இல் பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும், டெல்லி பாஜக செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1991-இல் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.
1998-ஆம் ஆண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பிறகு, வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக் கட்டிலுக்கு வந்த போது, அக்டோபர் 13, 1999-இல் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். முதலீடுகள் தொடர்பான கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில், தனி அமைச்சகம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. அதற்கு இணை அமைச்சராக அருண் ஜெட்லி நியமனம் செய்யப்பட்டார்.