ராஜ்யசபாவில் காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியசாமி!

ராஜ்யசபாவில் காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட சுப்பிரமணியசாமி!

Update: 2019-11-21 10:41 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பே இல்லை. மேலும் சோனியாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. எனவே மத்திய அரசு, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான எஸ்.பி.ஜி.பாதுகாப்பை மாற்றி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.


இந்தநிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதல் லோக்சபாவில் இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சியும், திமுக கட்சியும் எழுப்பி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். சோனியாவுக்கும், அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மீண்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


லோக்சபாவை தொடர்ந்து ராஜசபாவிலும் இந்த பிரச்சனையை காங்கிரசார் எழுப்பினர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். சோனியா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அதனால் அவர்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.


ஆனந்த சர்மாவிற்கு, பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி, பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு உள்ளது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்றுதான் பாதுகாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவில் காங்கிரசுக்கு சந்தேகம் இருந்தால், அவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, படுகொலையைத் தொடர்ந்து விடுதலை புலிகளால், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது.


இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டனர். அந்த அமைப்பே இப்போது இல்லை. அப்படி இருக்கும்போது, சோனியாவிற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ விடுதலைப் புலிகள் மூலம் அச்சுறுத்தல் எப்படி வரமுடியும்?


இந்த விவகாரத்தில், காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. அவர்கள் ஒரு பக்கம் அச்சுறுத்தல் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில், மறுபக்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இது அவர்களின் இரட்டை வேடத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.


இவ்வாறு டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.


Similar News