இந்துக்களால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படும் மசூதி : பீகார் மாநிலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்துக்களால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படும் மசூதி : பீகார் மாநிலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2019-09-04 02:09 GMT

பீகார் மாநிலத்தின் நாலாந்தா மாவட்டத்தின் மாரி கிராமத்தில் கைவிடப்பட்ட மசூதி ஒன்றை இந்துக்கள் ஒன்றிணைந்து புதுப்பித்து தினமும் 5 வேளையும் அங்கு பாங்கின் ஒலியை ஒலிக்கச் செய்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.


பீகார் மாநிலத்தில் உள்ள நாலாந்தா மாவட்டம் அருகில் உள்ளது மாரி கிராமம். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் தேவைக்காக பள்ளி வாசலும் கட்டப்பட்டது. ஆனால் இவர்கள் வேலையில்லாததால் வாழ்வாதாரம் தேடி முஸ்லிம் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்.


முஸ்லிம்களின் புழக்கத்தில் இருந்த பள்ளிவாசல் ஆட்கள் இன்றி பழுதடையத் தொடங்கியது. இடிந்து போகும் நிலை ஏற்பட்டது, இந்நிலையில் அந்த கிராமத்து இந்து மக்கள் தங்கள் ஊரில் இருந்த பழமையான பள்ளிவாசலை மராமத்து பணிகள் மேற்கொண்டு தூய்மைப்படுத்தி, வெள்ளையடித்து அழகு பெற செய்துள்ளனர். ஐந்து நேரமும் பாங்கு சொல்வதற்காக ஒரு பென் ட்ரைவ் மூலமாக ஏற்பாடு செய்து தற்போது ஐந்து நேரமும் அங்கு பாங்கின் ஒலி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


இந்த பள்ளிவாசல் எங்கள் கிராமத்தின் அடையாளம். அதனை இழக்க நாங்கள் விரும்பவில்லை' என்கின்றனர் அக்கிராமத்து இந்து மக்கள்.


இது மிகவும் பழைய மசூதி. கைவிடப்பட்ட இந்த மசூதியை இங்கு உள்ள இந்துக்கள் இந்த மசூதியை உயிர்ப்பித்து தொழுகைக்கும் பாங்கு சொல்வதையும் நடத்தி அதன் பிறகு தங்கள் சிரம் தாழ்த்தி வணங்கி விட்டுச் செல்கின்றனர்” என்கிறார் உள்ளூர் வாசி ஈஸ்வர் பஸ்வான்.


மேலும் இந்த மசூதியை இங்குள்ள இந்துக்கள் சுத்தமாக வைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் எந்த ஒரு திருமணம் நடந்த பிறகும் புதுமணத் தம்பதிகள் இந்த மசூதிக்கு வந்து கும்பிட்டு விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இந்துக்கள்-முஸ்லிம்களிடையே ஒற்றுமையைப் பேணி வளர்க்கும் என்கின்றனர் இந்த கிராம மக்கள்.


Similar News