“யோசிப்பதற்கு நேரமில்லை; என் கடமையைச் செய்தேன்” - 2 குழந்தைகளை தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டுக்கள் !!
“யோசிப்பதற்கு நேரமில்லை; என் கடமையைச் செய்தேன்” - 2 குழந்தைகளை தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டுக்கள் !!
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிச் சிறுமிகள் இருவரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் தனது தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்காரர் பிரித்விராஜ் சிங் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது குறித்து அவர் கூறும்போது, "நான் நின்று நிதானமாக யோசிப்பதற்கு எனக்கு நேரமில்லை. நான் என் கடமையையே செய்தேன்” என்று கூறியுள்ளார்
குஜராத் மாநிலத்தின் வதோதரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிகிறது. மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளம் சூழந்த மோர்பி மாவட்டத்தின் கல்யாண்பூர் கிராமத்தில் 17 குழந்தைகள் உட்பட 42 பேர் சிக்கியுள்ளதாக டங்காரா காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து அந்த காவல் நிலையத்தச் சேர்ந்த காவலர்களே மீட்புப் பணியைத் தொடங்கினர். தற்காலிக படகு ஒன்றை அவர்கள் அமைத்தனர். ஆனால், வெள்ள அளவு கூடிக்கொண்டே இருந்ததால் அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் சிங் ஜடேஜா என்ற போலீஸ்காரர், இரண்டு சிறுமிகளை தனது தோள்களில் சுமதந்தவாறு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து காப்பாற்றினார். அவரது கால்களில் இருந்த காயங்களைக்கூட பொருட்படுத்தாமல் அவர் சிறுமிகளைக் காப்பாற்றினார்.
இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகி போலீஸ்காரர் பிரித்விராஜூக்கு பாராட்டுகள் குவிந்தன.
தனது துணிச்சலான துரிதமான நடவடிக்கையால் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவரும் பிரித்விராஜ் கூறும்போது, "கல்யாண்பூரில் 40 பேர் சிக்கியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நாங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தோம். கூட்டாக செயல்பட்டு அனைவரையும் மீட்டோம். வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் நின்று யோசிக்க நேரமில்லை. அதனால், அந்த இரண்டு குழந்தைகளையும் நான் தோளிலேயே சுமந்து சென்றேன். மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் இலக்காக இருந்தது" என்று இயல்பாகக் கூறியுள்ளார்.