வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்திய சிங்கம்: டி.என்.சேஷன் காலமானார் !
வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்திய சிங்கம்: டி.என்.சேஷன் காலமானார் !
சுதந்திர இந்தியாவில் டி.என்.சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக பணிக்கு வரும்வரை தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வல்லவர்கள் வகுப்பதே சட்டமாக இருக்கும், அரசியல் கட்சிகளும், சாதி பெரும்பான்மையின் ஆணவம் கொண்டவரும் ஆங்காங்கு அதிகாரிகளை மிரட்டி, அடிபணிய வைத்து அல்லது அவர்களை வளைத்துப் போட்டு தேர்தலை தங்கள் இஷ்டம்போல நடத்துவது பெரும்பாலான இடங்களில் ஒரு அசிங்கமான வழக்கமாக இருந்தது, இந்த தவறான நடைமுறைகளில் இருந்து தேர்தல் கமிஷனை மீட்டு நியாயமான தேர்தலை நடத்த வழி ஏற்படுத்திய சிங்கம்தான் டி.என்.சேஷன்.
இவர் பொறுப்பேற்ற பின்தான் தேர்தல் கமிஷனின் வானளாவிய அதிகாரங்களை மக்களும், அரசியல்வாதிகளும் உணர்ந்தனர். முறைகேடான அரசியல்வாதிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் சிம்ம சொபனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் அவர்களின் நடவடிக்கை பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆசியாவின் மிக உயர்ந்த மகசசே விருதுப்பெற்ற டி.என்.சேஷன் (87) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் சுருக்கமாக டி.என் சேஷன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். 10 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1991-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் 1996-ம் ஆண்டு டிசம்பர் 11 வரை பதவி வகித்தார்.
1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி (அப்போதைய நெல்லை மாவட்டம்) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், திருநெல்லையில் பிறந்தவர் டி.என்.சேஷன். இயற்பியல் பட்டதாரியான சேஷன், சென்னை கிருஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.