லக்னோவில் வாஜ்பாய் பெயரில் பிரம்மாண்ட மருத்துவப் பல்கலைகழகம் !! முதல்வர் யோகி அரசு முடிவு!
லக்னோவில் வாஜ்பாய் பெயரில் பிரம்மாண்ட மருத்துவப் பல்கலைகழகம் !! முதல்வர் யோகி அரசு முடிவு!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் மருத்துவப் பல்கலை கழகம் அமைக்க உ.பி. அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று முதல்வர் யோகி தலைமையில் கூடிய அமைச்சரவை முக்கியத் திட்டங்களை அமலாக்க முடிவு செய்துள்ளது. இதில், முக்கியமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் புதிய மருத்துவப் பல்கலைக் கழகம் அமைய உள்ளது.
வாஜ்பாய் பெயரிலான புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் உ.பி.யின் தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
இது குறித்து நேற்று மாநில அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, ''புதிய மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மாநில மருத்துவத்துறை 20 ஏக்கர் நிலம் அளிக்கிறது. மீதி நிலத்தை மாநில மருத்துவக் கல்வித்துறையும், லக்னோ வளர்ச்சிக் கழகமும் தலா 15 ஏக்கர் நிலம் அளிக்க உள்ளன'' எனத் தெரிவித்தார்.
உ.பி.யில் இரண்டு வருடங்களுக்கு முன் புதிதாக அமைந்த பாஜக அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க முடிவு எடுத்தது. இதில் 8 கல்லூரிகள் கடந்த வருடம் முதல் செயல்பட, இந்த வருடம் ஐந்து தொடங்கப்பட்டுள்ளது.