விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தான மண்ணில் செய்யப்பட்ட செடிப் பிள்ளையார் சிலைகள்!! தோட்டக் கலைத்துறை அசத்தல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தான மண்ணில் செய்யப்பட்ட செடிப் பிள்ளையார் சிலைகள்!! தோட்டக் கலைத்துறை அசத்தல்
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசும் துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம்.
விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
சிலைகள் அனைத்தும் சேப்பாக்கம், செம்மொழிப் பூங்கா மற்றும் மாதவரம் தோட்டக்கலைத் துறை பூங்காவில் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மண் பானை ஒன்றில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் ரூ.200-க்கு விற்கப்படுகிறது. சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் இதேபோன்ற சிலைகளை உருவாக்குமாறு தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்துள்ளோம்.
சூழல் மாசுபாட்டைத் தடுக்கவே இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீராதாரங்களிலும் கடலிலும் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் கேடுகளை விதை விநாயகர் சிலைகள் குறைக்கின்றன.
இந்த விநாயகர் சிலையில் வண்ணப் பூச்சோ, வேதிப் பொருட்களோ பயன்படுத்தப்படவிலை. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு, குடும்பத்தினர் அந்த சிலையில் தண்ணீரை ஊற்றலாம். அதன்மூலம் விதை கரைந்து, செடி முளைத்து வளரும்'' என்கிறார் தோட்டக்கலைத் துறை இயக்குநர்.