உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாங்கதான்!! இரட்டை இலையின் மவுசு குறித்து எடப்பாடி மற்றும் ஓ.பி.ஸ் உற்சாக அறிக்கை.!

உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாங்கதான்!! இரட்டை இலையின் மவுசு குறித்து எடப்பாடி மற்றும் ஓ.பி.ஸ் உற்சாக அறிக்கை.!

Update: 2019-10-26 05:55 GMT


இடைத்தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் பணியாற்றி வெற்றி பெறுவோம் என்று ஓ.பிஎஸ்., இபிஎஸ் கூறியுள்ளனர்.


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் தமிழக மக்களின் பேரன்பை பெற்ற சின்னம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.


தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா அரும்பாடுபட்டு அமைத்து தந்த அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதாவின் பாதையில் மக்கள் பணியாற்றுவதை பாராட்டும் விதமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் மட்டுமின்றி, தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைவரது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து பெறும் வகையில் அ.தி.மு.க. அரசு மக்கள் பணியாற்றும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.


ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும். கொள்கைகளில் சற்றும் சமரசம் இன்றி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழ்நாட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கும், அமைதியான சமூக சூழலை உறுதி செய்யவும், இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டவும், எங்களால் இயன்றது அனைத்தையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம். இதே உற்சாகத்தோடு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க. ஆயிரங்காலத்துப் பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.


Similar News