“ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பயன்? பூமிக்கு பாரமாக இருக்கிறார்” - போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சியில் காங்கிரஸ் !!

“ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பயன்? பூமிக்கு பாரமாக இருக்கிறார்” - போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சியில் காங்கிரஸ் !!

Update: 2019-08-14 05:52 GMT


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-


கேள்வி:- டெல்டா பாசனத்திற்காக விவசாயிகள் சுமார் 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களே?.


பதில்:- கால்வாய்களில் சுமார் 25 ஆயிரம் கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும். தற்போது விவசாயிகள் நாற்று நடும் பணியை செய்து வருகிறார்கள். அதன்பிறகு தான் அவர்கள் நடவுப்பணியினை தொடங்குவார்கள். தற்போது நாற்றுக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அவர்கள் எவ்வளவு தண்ணீர் கோருகிறார்களோ அவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படும்.




https://youtu.be/wUCRvLJPiu4


கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இனி அவர்களால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது. எனவே, இனி வருகின்ற நீர் அனைத்தையும் நமக்குத்தான் திறந்து விட முடியும். நமக்கு தேவையான நீர் கண்டிப்பாக கிடைக்கும்.


கேள்வி:- நீலகிரி மாவட்டம் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?


பதில்:- அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சின்ன, சின்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பில் என்ன பணிகள் மேற்கொள்ள முடியும். 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய எவ்வளவு நிதி தேவை என்பது உங்களுக்கு தெரியும்.


நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அது முற்றிலும் தவறானது. அங்கு கனமழை பெய்த உடனே எனது உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அமைச்சரை உடனடியாக அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆகவே எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான கருத்து. அவர் விளம்பரம் தேடத்தான் அதை சொல்லியிருப்பார் என கருதுகின்றேன்.


பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அரசு உதவி செய்யும். உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக அரசு அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் தான் விளம்பரம் தேடவில்லை என்று கூறியிருக்கிறார். நாங்களும் அதைத்தான் கூறுகிறோம். பின்னர் எதற்காக அமைச்சர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை என்ற தவறான கருத்தை தெரிவித்துள்ளார். அமைச்சர் சென்ற தகவல் அவருக்கு தெரியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எந்த செய்தியும் தெரியாமல், யாரோ கூறுகின்ற தகவலை வைத்து பேசக்கூடாது.


இன்றைய தினம் (நேற்று) துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நீலகிரி மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு சீர் செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் அடிப்படையில் நாளை (இன்று) உயர் அலுவலர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. நீலகிரியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.


கேள்வி:- நீங்கள் அமெரிக்கா செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என்ன?


பதில்:- வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என்ன வென்றால், தமிழகத்திற்கு அதிகளவில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பதே ஆகும். தமிழ்நாட்டில் இருந்து சென்று அயல் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை அழைத்துப் பேசி அதிக முதலீட்டினை ஈர்ப்பதற்காகவே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறேன்.


கேள்வி:- முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மத்திய அரசு தமிழகத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தால்கூட அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கும் என கூறியுள்ளாரே?


பதில்:- தமிழகத்தின் வளர்ச்சிக்காக ப.சிதம்பரம் என்ன திட்டத்தை கொண்டு வந்தார். இவர், எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அவரால் என்ன திட்டம் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டு காலம் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார். அவர் தேவையான நிதியை வழங்கினாரா? புதிய தொழிற்சாலைகள் அமைத்தாரா?. அல்லது புதிய திட்டத்தைதான் கொண்டு வந்தாரா? காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகளைதான் தீர்த்து வைத்தாரா?. அவரது சுயநலம் மட்டுமே அவருக்கு முக்கியம். அவரால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. பூமிக்கு பாரமாக இருக்கிறார் ப.சிதம்பரம்.


அவரால் நாட்டுக்கு நலன் கிடையாது. ஆகவே அவரது பேச்சை பொருட்படுத்த அவசியம் இல்லை. மக்கள் அவரை ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள். அவர் எந்த மக்களை சந்திக்கிறார். நான் முதல்வராக இருந்து எத்தனை முறை இங்கு வந்துள்ளேன். எத்தனை முறை மக்களை பார்த்துள்ளேன். எத்தனை திட்டங்களை அறிவித்துள்ளேன். ஆனால் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது எத்தனை முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எத்தனை திட்டங்களை அறிவித்துள்ளார். நீங்களே கூறுங்கள் பார்க்கலாம்.


கேள்வி:- காஷ்மீர் விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன?


பதில்:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, 1984-ம் ஆண்டு ஜூலை மாதம் மேலவை உறுப்பினராக இருந்தபோது தெரிவித்த கருத்து தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து இப்படி ஒரு சரவெடியை காங்கிரசார் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னனும் மீளவில்லை.


Similar News