இந்திய விமானப்படை பட்டையைக் கிளப்பப்போகிறது - எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாகும் அப்பாச்சி ஹெலிகாப்டர் : பாகிஸ்தானை பதற வைக்கும் டெக்னாலஜி!
இந்திய விமானப்படை பட்டையைக் கிளப்பப்போகிறது - எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாகும் அப்பாச்சி ஹெலிகாப்டர் : பாகிஸ்தானை பதற வைக்கும் டெக்னாலஜி!
இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள் ( Apache AH-64E) வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இதில், கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
சிங்கநடை போடும் ஆற்றல் கொண்டவை:
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்து அளிக்கும் உலகிலேயே அதிநவீன மேம்படுத்தப்பட்ட பன்முக போர் ஹெலிகாப்டர் இதுதான். அதிவேகத்துக்கான உயர் செயல் திறன் கொண்ட 2 டர்போஷாப்ட் என்ஜின்களைக் கொண்டுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 284 கி.மீ. வானில் இருந்து புறப்பட்டுச்சென்று தரையில் தாக்குதல்கள் நடத்தும் ஏவுகணைகள், லேசர் வழிகாட்டும் ஏவுகணைகள், 70 எம்.எம். ஹைட்ரா ராக்கெட்டுகள், வானில் இருந்து புறப்பட்டுச்சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் இத்தனையும் இந்த நவீன ரக ஹெலிகாப்டரில் அடக்கம்.
இன்னும்கூட இருக்கிறது:
இதில் 1,200 தோட்டாக்களுடன் கூடிய ஒரு 30 எம்.எம். செயின் துப்பாக்கியும் உண்டு. தீ கட்டுப்பாட்டு ரேடார், அதிநவீன சென்சார்களும் இந்த ஹெலிகாப்டரில் இருக்கின்றன. விமானி, துணை விமானி என இருவர் இயக்குவார்கள். இந்த ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையின் தாக்குதல் திறன் மேம்படும். எனவேதான், 22 விமானங்களை வாங்குவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் போயிங் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், எகிப்து, கிரீஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகள் தங்கள் படையில் கொண்டு உள்ளன. அந்த வகையில் இந்தியா, ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துகிற 16-வது நாடு என்ற சிறப்பைப் பெறுகிறது.