முத்தலாக் செய்த கணவன் மீது போலீசில் புகார்: பெண் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை!! குடும்பத்தினர் கைது!!
முத்தலாக் செய்த கணவன் மீது போலீசில் புகார்: பெண் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை!! குடும்பத்தினர் கைது!!
உத்தரபிரதேசத்தில் முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்ணை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சிரவங்கி மாவட்டம் கட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ் (வயது26). இவர் மும்பையில் வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி சயீதா (22). இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆவேசம் அடைந்த நபீஸ் போனில் மனைவியை அழைத்து முத்தலாக் முறையில் போன் மூலம் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சயீதா இதுகுறித்து பிங்கபுர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவரது புகாரை முறையாக விசாரிக்கவில்லை.
தன் மீது போலீசில் புகார் கொடுத்ததால் மனைவி மீது நபீஸ் மேலும் ஆத்திரம் அடைந்தார். மும்பையில் இருந்து ஊர் திரும்பிய அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது நபீசின் தந்தை, தாய், சகோதரிகள் மற்றும் உறவினர் 3 பேர் என கும்பலாக அங்கு சென்றுள்ளனர்.
அப்போது நபீஸ் தனது மனைவியின் தலை முடியை பிடித்து இழுத்து, அடித்து உதைத்து தாக்கினார். அப்போது நபீசின் சகோதரிகள் சயீதா மீது மண்எண்ணையை ஊற்றினர். நபீசின் தந்தை-தாய் இருவரும் சயீதா மீது தீ வைத்துள்ளனர்.
இவற்றை சயீதாவின் மகள் நேரில் பார்த்து அலறினார். அவர் கதறி துடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடினார். அவரது சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அதற்குள் சயீதா இறந்து விட்டார்.
கொலை குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சயீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.