இந்திய அளவில் புகழ்பெற்ற கோவில் தேரோட்டம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்!
By : Shiva
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காடு அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டம் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சுவாமி கோவில் இந்திய அளவில் புகழ்பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தின் போது விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் அனுமந்தராய சுவாமி, ராமர், சீதை, ராகவேந்திரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து இங்கு தங்கி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தக் கோவில் திருவிழாவின் எட்டாம் நாளில் தேரோட்டமும் ஒன்பதாம் நாளில் உற்சவர் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.
இந்த ஆண்டு இந்த கோவில் திருவிழா மே 18-ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கோவில்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் தினமும் பூஜைகள் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் திருவிழா பக்தர்கள் இன்றி இந்த கோவிலிலேயே நடைபெறும் என்று கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் புகழ்பெற்ற காடு அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டம் நடத்த இந்த ஆண்டும் தடை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.