சிவன்மலை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட அற்புதப் பொருள் - கொரோனா பாதிப்பு குறையும் என்று நம்பிக்கை!
By : Shiva
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துளசி, வேப்பிலை, மஞ்சள், வில்வம் உள்ளிட்ட ஆறு பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோய் தாக்கம் விரைவில் குறையும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் குறிப்பிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கு வைக்கப்படும் பொருள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறது என்பது தான்.
சிவன்மலை முருகன் பக்தர்கள் கனவில் வந்து இந்த பொருளை வைத்து வழிபட வேண்டும் என்று கூறுவார். அதன்படி பக்தர்கள் கோவிலில் வந்து தெரிவித்த பின்னர் சுவாமி முன்பு பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்த பின்னர், அந்தப் பொருளை கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதனை கோவிலில் மூலவருக்கு எதிராக உள்ள அறையில் கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்கள் பார்வைக்கு வைப்பர். இதுவே ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வைக்கப்படும் பொருள் தேசிய அளவில் நடக்கப் போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே காட்டும் குறியீடாக கருதப்பட்டு வருகிறது. மற்றொரு பக்தரின் கனவில் முருகப்பெருமான் வந்து என்ன பொருளை வைத்து வழிபட வேண்டும் என்று சொல்லும் வரை ஏற்கனவே வைக்கப்பட்ட பொருளுக்கே தொடர்ந்து வழிபாடு நடத்தப்படும். கடந்த முறை ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் கடந்த திங்கள்கிழமை வரை இங்கு குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் வந்த முருகப்பெருமான் இந்த முறை துளசி, வேப்பிலை, வில்வம், அருகம்புல், விபூதி மற்றும் மஞ்சள் தூள் வைத்து வழிபாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். எனவே தற்போது இந்த ஆறு பொருள்களையும் வைத்து பூஜை செய்யப்பட்டு அவை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா பெரும் தொற்று குறைவதற்கான அறிகுறி என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.