தேர்தலில் தோல்வியடைந்த போதும் சொந்தப் பணத்தில் வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க-வின் மெட்ரோமேன்!
By : Shiva
அண்மையில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட போதிலும் 'மெட்ரோ மேன்' என்று அன்பாக அழைக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஸ்ரீதரன் தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு மின் இணைப்புகளைப் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்ரீதரன் தனது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, மே 18ஆம் தேதி பாலக்காட்டில் உள்ள பட்டியல் இனத்தவர் குடும்பங்களின் மின்கட்டண நிலுவைத் தொகையை அளிக்க உதவி பொறியாளரிடம் ரூபாய் ₹ 81,525க்கான காசோலையை அளித்துள்ளார். இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மின் கட்டண நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க தலைவர் கிருஷ்ணதாஸ் என்பவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் இதற்கான காசோலையை வழங்கினார்.
அந்த மாவட்டத்தில் உள்ள 11 பழங்குடியின மக்களின் மின்கட்டண நிலுவைத் தொகையை மெட்ரோ மென் தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தியுள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது 88 வயதான தொழில்நுட்ப வல்லுநரான இவர் பாலக்காடு நகராட்சியின் மதுரைவீரன் காலனியில் வசிப்பவர்களுக்கு "தான் வென்றாலும் வெற்றி பெறாவிட்டாலும், அப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்புகள் கிடைக்கும்" என்று உறுதியளித்திருந்தார்.
இந்த நகராட்சியில் உள்ள 3 வது வார்டில் ஒரு சில பட்டியல் இனத்தவர்கள் (எஸ்சி) தங்கள் வீடுகளுக்கு நிலுவைத் தொகை செலுத்தாமல் இருப்பதால் மின்சார இணைப்பு இல்லை என்று குடியிருப்பு வாசிகள் அவரை அணுகியதை அடுத்து ஸ்ரீதரன் தான் இந்த குறையை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு டாக்டர்.ஸ்ரீதரன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். மார்ச் 4, 2021 அன்று கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளராக ஈ.ஸ்ரீதரன் இருப்பார் என்று கட்சி அறிவித்து. துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீதரன் தோல்வியடைந்தார். இருந்தபோதிலும் அவர் அந்த தொகுதியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்.