ஸ்ரீரங்கம் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தும் பணி தொடக்கம் - இந்து அறநிலையத்துறை!
By : Shiva
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணிகளை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளது. இதனால் அங்கு உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் போட்டோ எடுத்து கணினியில் பதிவேற்றம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்குள் பழங்கால ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஓலைச் சுவடிகளில் கோவில் பற்றிய வரலாறு, உற்சவங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் அனைத்தும் தெலுங்கு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த ஓலைச்சுவடிகள் இங்கு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயற்கை சீற்றங்களால் ஓலைச்சுவடிகள் அழிந்து போகாமல் இருப்பதற்காக ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணிகளை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதற்காக ஓலைச் சுவடிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் பணியை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Source: Dinamalar