Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு தந்தையை போல் பார்த்து பார்த்து செய்யும் மத்திய அரசு.!

கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு ஒரு தந்தையை போல் பார்த்து பார்த்து செய்யும் மத்திய அரசு.!

ShivaBy : Shiva

  |  30 May 2021 5:02 AM GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளியிலிருந்து கல்லூரி வரை அவர்களது செலவை மத்திய அரசு ஏற்கும் அனைத்து வகையான திட்டங்களும் மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்கான கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்த நலத்திட்டங்களை அறிவிக்கும் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எதிர்காலத்தை குழந்தைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும் வலிமை மிக்க குடிமக்களாக குழந்தைகள் உருவாவதற்கும், ஒளிமயமான எதிர்காலம் கிடைப்பதற்கும் ஆதரவளித்து, அவர்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பிஎம் ‌கேர்ஸ் நிதியிலிருந்து ஆதரவளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்து வாடும் அனைத்து குழந்தைகளுக்கும் நிதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெயரில் ₹ 10 லட்சம் வைப்புத்தொகையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகையை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். மேலும் அவர்கள் 23 வயதை அடைந்தவுடன் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்த பணமும் பயனாளிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 10 வயதுக்கு கீழுள்ள பள்ளி குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும் என்றும் குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால் கல்வி உரிமை சட்டத்தின் படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.

11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும். குழந்தை ஒரு வேளை பாதுகாவலர் அதாவது தாத்தா பாட்டி அல்லது வேறு உறவினர்கள் பராமரிப்பில் இருந்தால் அவர்கள் வீட்டின் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடய அனைத்து செலவையும் மத்திய அரசு பிஎம் ‌கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக ஏற்கனவே உள்ள கல்விக் கடன் விதிகளின் படி இந்தியாவில் தொழில் கல்வி/ உயர் கல்வி படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவதற்கு குழந்தைக்கு ஆதரவு வழங்கப்படும். இதற்கான வட்டியை பிஎம் கேர்ஸ் செலுத்தும்.

இளநிலை/தொழில் கல்விக்கான கட்டணத்திற்கு சமமான உதவித் தொகை மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஏற்கனவே உள்ள உதவித் தொகை திட்டங்களுக்கு குழந்தை தகுதியாக இல்லையெனில், அதற்கு சமமான ஊக்கத்தொகையை பிஎம் கேர்ஸ் வழங்கும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 லட்சம் மருத்துவ காப்பீட்டுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவர் என்றும் அவர்களுக்கு 18 வயதாகும் வரை பிரீமியம் தொகை பிஎம் ‌கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News