மிக்சர் கடைக்காரருக்கு வந்த விடியல் - கந்து வட்டிக் கொடுமையால் நடுத்தெருவில் குடும்பம்!
By : Shiva
தமிழகத்தில் இத்தனை நாட்களாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை துன்புறுத்தி வந்த கந்துவட்டித் தொல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மதுரவாயிலில் கந்துவட்டியால் ஒரு குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 லட்சம் கடன் தொகைக்காக ஒரு கோடி ரூபாய் வீட்டை அபகரித்து ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
]மதுரவாயலில் அந்தோணி சுரேஷ் என்பவர் புதிதாக இடம் வாங்கி அங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மிக்சர் கடை நடத்தி வரும் அவர் கந்துவட்டிக்கு சிகாமணி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை வைத்து 22 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனுக்கான வட்டியை சரிவர செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் 22 லட்சம் ரூபாய்க்கு அசல் மற்றும் வட்டியை சேர்த்து 38 லட்ச ரூபாய் வந்து விட்டதாகவும், அந்தத் தொகையை செலுத்தவில்லை என்பதால் உடனடியாக வீட்டை காலி செய்து அந்த வீட்டை தனக்கு தருமாறும் சிகாமணி அடியாட்களுடன் சென்று மிக்சர் கடைக்காரரை மிரட்டியுள்ளார்.
மேலும் ஊரடங்கு காலம் என்று கூட பார்க்காமல் அடியாட்களுடன் சென்ற சிகாமணி அவர்களின் வீட்டிலிருந்த பொருட்களை வீட்டை விட்டு வெளியே தூக்கி எறிந்து அந்தோணி சுரேஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.
இது குறித்து அந்தோணி சுரேஷ் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர். 22 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 38 லட்சம் ரூபாய் கேட்பது மட்டுமல்லாமல் அந்த வீட்டை விற்பதற்கு சிகாமணி தடை செய்து வந்துள்ளார். மேலும் அந்தோணி சுரேஷ் குடும்பத்தை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டதால் அவர்கள் தங்க இடமின்றி சாலையோரத்தில் இருந்து வசிக்கின்றனர்.
எனவே இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 38 லட்ச ரூபாய்க்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று கந்துவட்டிக்காரர் சிகாமணி மிரட்டி வருவதால் செய்வது அறியாமல் அந்தோணி சுரேஷ் தவித்து வருகிறார்.