சர்ச்சுகளில் தொடரும் தீண்டாமை : சேலத்தில் தலித்தை பிஷப்பாக நியமிக்காததால் பெரும் சர்ச்சை..!
By : Yendhizhai Krishnan
கிறிஸ்தவ மதத்தில் ஜாதிகள் இல்லை என்று கூறிக்கொண்டு அப்பாவி தலித் மற்றும் மீனவர்களை மதம் மாற்றும் மதமாற்ற சக்திகள், அவர்களை எண்ணிக்கைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கான உரிமையை மறுக்கும் கொடுமை கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. பல தலித் கிறிஸ்தவர்கள் இது பற்றி பேசி வரும் நிலையில் தற்போது இதை நிரூபிக்கும் விதமாக மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் தலித்துகளாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு தலித் பிஷப் மட்டுமே இருக்கிறார். பல வருடங்களாக தலித் ஒருவரை பிஷப்பாக நியமிக்க வேண்டும் என்று தலித் கிறிஸ்தவர்கள் போராடி வரும் நிலையில் தற்போது மீண்டும் தலித் அல்லாதவரை தலித்துகள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிஷப்பாக நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மறைமாவட்டத்தில் தலித் அல்லாத ஒருவரை வாட்டிகன் பிஷப்பாக நியமித்துள்ளது. அங்கு வாழும் தலித் கிறிஸ்தவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருள்செல்வம் ராயப்பன் என்பவர் பாண்டிச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பிஷப்பாக இருந்தார். அவரை மே 31-ஆம் தேதியன்று போப் ஆண்டவர் சேலம் மறைமாவட்ட பிஷப்பாக நியமித்துள்ளார். 60 வயதான ராயப்பன் தற்போது பெங்களூரில் உள்ள பீட்டர்ஸ் கேனான் சட்ட ஆய்வுகள் மையத்தின் பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
இந்த நியமனத்திற்கு தலித் மற்றும் பின்தங்கிய வகுப்புகளின் இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாட்டில் முன்னாள் செயலாளர் தேவசகாயராஜ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் சேலம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் தற்போது தலித் அல்லாதவர் ஒருவரை பிஷப்பாக நியமித்து இருப்பது தலித் மக்களை அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தலித்துகள் அதிகம் வசித்து வரும் மாவட்டங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே பிஷப்பாக நியமிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Dalit Catholics angry over bishop appointment in India https://t.co/Bu8DDsQWVd
— Subhashini Ali (@SubhashiniAli) June 4, 2021
பிஷப் நியமனத்தில் வாரிசு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுவதாக தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார். இப்போது பிஷப்பாக நியமிக்கப்பட்டவர் சுல்தான் பேட்டை மறைமாவட்ட பிஷப் பீட்டர் அபீர் அந்தோணிசாமியின் உறவினர் என்றும், அந்தோணிசாமி பாண்டிச்சேரி மற்றும் கடலூர் பேராயரின் அப்போஸ்தல நிர்வாகியாகவும் இருப்பதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தலித் கிறிஸ்தவ ஆர்வலர் மேரி ஜானும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 30 வருடங்களாக ஒரு தலித்தை கிறிஸ்தவ பிஷப் ஆக நியமிக்க கோரிக்கை வைத்து வந்த நிலையிலும் தற்போது மீண்டும் ஒரு தலித் அல்லாதவரை பிஷப்பாக நியமித்துள்ளது தங்களுக்கு பெரும் பின்னடைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
பிஷப் பதவி காலியாக இருக்கும் போதெல்லாம் ஒரு தலித் பிஷப்பை நியமிக்குமாறு வலியுறுத்தி தேர்வுக்குழு மற்றும் பிற ஆயர்களுக்கு கடிதங்கள் எழுதியதற்கான முழு ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதனை வாட்டிகன் பரிசீலனை கூட செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். "எங்கள் கோரிக்கையை கேட்டு ஏற்று அதனை வழங்குவதாக உறுதியளித்த பின்னரும் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.