தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்றும் கோவில் நிலங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு தனி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து கோவில்களை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 44,121 கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் 8450 கோவில்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நல்ல நிலையில் 32,935 கோவில்களும்
6414 கோவில்கள் சிறிய சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டிய நிலையிலும், 530 கோவில்கள் பாதி சேதமடைந்த நிலையிலும் 716 கோவில்கள் முழுமையாக சிதிலமடைந்த நிலையிலும் உள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொன்மையான கோவில்களையும் பாதுகாப்பது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான மற்றும் பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக கோவில்களின் சொத்துப் பட்டியலை தயாரித்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் கோவில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் அதற்கான வாடகையை சரிவர செலுத்தாவிட்டால் அவர்களிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என்றும் கூறினர். கோவில் சிலைகள், நகைகள் உள்ளிட்ட பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் இந்த சிலைகளை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதே போன்று மாநில மற்றும் மாவட்ட அளவில் ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிலைகள் மற்றும் நகைகளின் புகைப்படத்தை எடுத்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு கோவிலுக்கு சொந்தமான நிலங்களாக அறிவித்து வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். கோவில் அறங்காவலர் களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் பரம்பரை அறங்காவலர்கள் யாரென்பதை அரசு அடையாளம் காண வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கோவில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற விசாரணையை மேற்கொள்வதற்காக தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் அதிரடிடயாக உத்தரவிட்டனர். மேலும் கோவில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கோவில் சொத்துக்களை திருடியவர்கள் மற்றும் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த உத்தரவுகள் அனைத்தையும் 12 வாரங்களுக்குள் அமல்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.