இடிந்து விழும் நிலையில் ராஜகோபுரம்- அறநிலையத் துறையின் அலட்சியத்தால் அவலம்!
By : Shiva
திருவண்ணாமலை அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலின் ராஜகோபுரம் பராமரிப்பின்றி செடிகள் முளைத்து இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அரடாபட்டு கிராமத்தில் உள்ள அனவரதாண்டேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள சைவ தலங்களில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மகா சிவராத்திரி, தீபத் திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் கோவில் பராமரிப்பின்றி ராஜகோபுரத்தில் செடிகள் முளைத்து கலசத்தையே மறைத்துள்ளது. இதனால் இந்த கோவில் கோபுரத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் முழுவதையும் பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில், அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்துக்களின் வாழ்க்கை முறை, வரலாறு மற்றும் கலாச்சாரமஅ அனைத்தும் கோயில் மூலமாகவே நாம் அறிந்து வரும் நிலையில் இனி வரும் சந்ததியினர் கோவில்களில் உள்ள வரலாற்றினை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கோவில்களை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.
எனவே சரிவர பராமரித்தால் கோவில்களை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டு இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டிருந்த #FreeTNTemples என்ற பிரச்சாரத்துக்கு தனது ஆதரவினை தெரிவிப்பதாக பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.