தேர்தல் பணிக்கு கோவில் வாகனங்கள் சமூக ஆர்வலர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
By : Shiva
சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் பயன்படுத்துவதற்காக விலை உயர்ந்த கார்கள் வாங்கப்பட்டதாகவும் கூட்டங்களின் போது சிற்றுண்டி உணவு உள்ளிட்டவை வாங்க கோவில் நிதியைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சமூக ஆர்வலரும் ஆலய வழிபாட்டுக் குழு தலைவரும ரமேஷ் கோவிலுக்கு சொந்தமான வாகனங்களை தேர்தல் பணிக்காக பயன்படுத்தக்கூடாது என்று 2019ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறைக்கு கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதன் பேரில் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கோவில் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில் கோவிலுக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களை கோவில் நிர்வாக பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் திருக்கோவிலுக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் இல்லை என்ற நிலைப்பாட்டினை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் இறைவன் மற்றும் இறைவிக்கு சொந்தமானவை என்ற நிலைப்பாட்டிலும் வாகனங்கள் அரசுக்கு சொந்தமானவை அல்ல என்ற நிலைப்பாட்டிலும் மதசார்பின்மை கோட்பாட்டிற்கு இணங்க பொதுப் பணிக்காக பயன்படுத்தக் கூடாதவை என்ற நிலைப்பாட்டிலும் மாவட்ட நிர்வாகங்கள் தேர்தல் பணிக்காக திருக்கோயிலுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள கேட்டால் திருக்கோவில்களில் செயல் அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வழங்க மறுக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவில் வாகனங்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் இதே நிலைப்பாட்டினை தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவிலுக்கு சொந்தமான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பல நேரங்களில் அரசே பயன்படுத்திவிட்டு வாடகை செலுத்தாமல் கோவில்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவங்கள் தான் இது வரை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இப்போது தேர்தலுக்கு கோவில் வாகனங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வரம்பு மீறிய செயல்பாடுகளை தவிர்க்க கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.