இந்தியாவில் சீனாவை விட விலை மலிவான மின்சார வாகனங்கள் -நிதின் கட்கரி!
By : Shiva
Rஅமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வாகனங்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் உற்பத்தி செலவு சீனாவை விட குறைவாக இருப்பதற்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா தனது மின்சார வாகனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பெங்களூரில் தொடங்கி மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்கு வருகை தரும் டெஸ்லாவின் முதல் மாடல் மலிவான டெஸ்லா மாடல்-3ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் போது உள்ளூர் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி தயாரிப்பினை மேற்கொண்டால் அரசிடமிருந்து சலுகைகள் அதிகமாக கிடைக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற சலுகைகள் அளிக்கும் போது மின்சார வாகன உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் இதனால் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் மின்சாரம் வாகனங்கள் கிடைக்கப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக மின்சார வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடகா மாநில பட்ஜெட்டின் போது அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அமெரிக்க நிறுவனம் தங்களது மின்சார வாகன தொழிற்சாலையை கர்நாடகாவில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.