சிதிலமடைந்து கிடக்கும் சோழர்கால கோவில்! சீரமைக்குமா அறநிலையத்துறை?
By : Shiva
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால் அதனைப் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தங்களின் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் சோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கற்றளி என்ற முறையில் கட்டப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது.
இந்தக் கோவிலை சுற்றி நீர் தேங்கும் அளவிற்கு அகழி ஒன்றை ஏற்படுத்தி அதன் மத்தியில் கோவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அகழியின் ஓரத்தில் உள்ள ஒரு சதுரமான வராண்டாவில் 200க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் அளவிற்கான கட்டமைப்பும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே இருக்கும் அமராவதி ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது இந்த கோவில்களில் நீர் தேங்கும் அளவிற்கு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஆனால் தற்போது இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த கோவிலை சுற்றி குப்பையை கொட்டி கோவிலின் சிறப்பினை பாழ்படுத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தக்க நடவடிக்கைகளை எடுத்து கோவிலை புனரமைத்து கோவிலின் வரலாற்றை வரும் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத அறநிலையத்துறை இனியாவது இந்த கோவிலை புனரமைக்கும் பணியை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.