இடிந்து விழும் நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் - அதிகாரிகள் கவனிப்பார்களா?
By : Shiva
அவினாசி அருகே அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய கோவில் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இந்த கோவில் அருகே மங்கலம் என்னும் இடத்திற்கு செல்லும் வழியில் சுந்தரமூர்த்திநாயனார் கோவில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வரலாற்றுடன் தொடர்புடைய கோவில் ஆகும். கடந்த காலங்களில் இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். அவர்கள் தங்குவதற்கு இந்தக் கோவில் அருகே தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
இவ்வளவு சிறப்புடன் விளங்கி வந்த இந்த கோவிலுக்கு காலப்போக்கில் பக்தர்கள் வரும் எண்ணிக்கை குறைந்ததால் இந்தக் கோவிலும் கோவிலுக்கு அருகில் இருக்கும் தங்கும் விடுதிகளும் பாழடைந்து காணப்படுகிறது.
தற்போது இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வெளிச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வெளிச்சுவர் மட்டுமல்லாமல் கோவிலின் பிரதான சுவரும் விரிசலுடன் காணப்படுகிறது.
மேலும் கோவிலின் உள்ளே இடியும் தருவாயில் உள்ள சுவர் இரும்பு தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே இடிந்துள்ள உள் சுவற்றில் இதுபோல் இரும்பு தடுப்பு மட்டும் வைத்து இருப்பது ஆபத்தானது என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகின்றது. எனவே அதிகாரிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலை புனரமைத்து பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.