கடையில் பாத்திரங்களை அள்ளிச் சென்ற தி.மு.க பிரமுகர்- குடும்பமே தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!
By : Shiva
கொடுத்த கடனை திருப்பி தருவதற்கு தாமதம் ஆனதால் வாடகை பாத்திரக் கடையில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் அள்ளிச் சென்ற தி.மு.க பிரமுகரின் மனித நேயமற்ற செயலால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் என்னும் பகுதியில் வாடகை பாத்திரக்கடை நடத்தி வருபவர் ராமநாதன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகராகிய ரவியிடம் கடன் பெற்றதாக தெரிகிறது. ராமநாதனுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனால் வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.
ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் தி.மு.க பிரமுகர் கடனை திருப்பித் தருவதற்கு வற்புறுத்தியதுடன் கடையில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள், டேபிள், சேர் என அனைத்து வாடகை பாத்திரங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ராமநாதனின் மனைவி மற்றும் மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பள்ளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராமநாதனின் குடும்பத்தில் உள்ள பெண்கள் தி.மு.க பிரமுகரால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனை தரும் விஷயம். ஏற்கனவே நிலத்தகராறில் ஒரு பெண்ணை இரண்டு தி.மு.க. நிர்வாகிகள் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் குடும்பத் தலைவிகளுக்கு ₹.1000 ரூபாய் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு மறுபக்கம் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதை திராவிட முன்னேற்ற கழகம் வாடிக்கையாக வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.