ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் - முக்கிய தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்!
By : Shiva
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்பதற்காக இந்து சமய அறநிலைத்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அளவிடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பொன்னகரம் அருகே பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார்.இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் நகைகளை மதிப்பீடு செய்து அதனை காட்சிப்பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் இணைந்து முதற்கட்டமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அளவீடு செய்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடைகள், திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் விமலா தெரிவிக்கையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அவரது உறவினர்களுக்கு பட்டா மாற்றி தந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் மூலம் 11 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகள் மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இப்பணி முழுவதும் முடிவடைந்ததும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி கோவில் நிலங்களை கோவிலுக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.