கோவிலை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை - பக்தர்கள் வேதனை!
By : Shiva
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவில் அமைந்துள்ளதால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நெடுஞ்சாலைத் துறையின் கோரிக்கையால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் முருகன், வள்ளி, தக்ஷிணாமூர்த்தி, சிவன், விநாயகர் என பல்வேறு சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்லும் நிலையில் முகூர்த்த தினங்களில் ஐந்து முதல் பத்து திருமணங்கள் இந்த கோவில்களில் நடைபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.
ஏழை எளியவர்களுக்கு ஏற்ற கோயிலாக விளங்கி வரும் இந்த கோவில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவிலை அப்புறப்படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பாக கடந்த 6 மாதத்தில் இரண்டு முறை இந்த கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆனால் கோவிலை இடிப்பதற்கு அப்பகுதி பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தர்ணா போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் கோவிலை அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
ஆனால் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளும்படி நெடுஞ்சாலைத்துறை கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தது. தேர்தல் முடியும் வரை கோவிலை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்காத நெடுஞ்சாலைத்துறை இன்னும் 15 நாட்களில் கோவிலை அப்புறப்படுத்தவில்லை என்றால் நெடுஞ்சாலைத்துறை கோவிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளது.
ஏழை எளியவர்களுக்கான கோவிலாக விளங்கி வரும் கறம்பக்குடி முருகன் கோவிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையால் அப்பகுதி பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.