ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலம் - அரசு நடவடிக்கை எடுக்குமா?
By : Shiva
குமாரபாளையத்தில் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் அதனை உடனடியாக மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அருவங்காடு என்னும் இடத்தில் அருந்ததியர் தெருவில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கோவிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் சிறிதளவு நிலங்கள் உள்ளன.
இந்தக் கோவில் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அவர் கோவில் நிலத்தில் 120 அடி ஆக்கிரமிப்பு செய்து தனது வீட்டின் மேற்கூரையை அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த அவர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால் காவல்துறையினர் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் இதேபோன்று பல்வேறு கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசு இது போன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோன்று கோவில் நிலங்கள் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் இந்து அறநிலையத்துறை ஆராய்ந்து கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இவை எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.