ரேசன் பொருட்களை 'டோர் டெலிவரி' செய்யும் திட்டம்: டெல்லியில் தொடக்கம்!

By : Bharathi Latha
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகிக்கும் திட்டத்தினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 25ம் தேதி தொடங்கி வைக்கிறார். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது.
கர் கர் ரேசன் யோஜனா என்ற பெயரில் ரேசன் பொருட்களை மக்களுக்கு, வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, டெல்லியில் உள்ள மக்களுக்கு ரேசன் பொருட்கள் வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும்.
இதனால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோரின் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன், வெயிலில் வரிசையில் நிற்பது, காலவிரயம் போன்றவை தவிர்க்கப்படும். இதுபற்றி உணவு மற்றும் பொது வினியோக அமைச்சர் இம்ரான் உசைன் கூறும்பொழுது, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வருகிற 25ம் தேதி முக்கிய மந்திரி கர் கர் ரேசன் யோஜனா என்ற திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இதன்படி, சீமாபுரி வட்டத்தில் உள்ள 100 வீடுகளுக்கு ரேசன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைக்கிறார். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற வட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
