Kathir News
Begin typing your search above and press return to search.

எளிதாக தொழில் செய்ய அரசு ஏற்படுத்திய ஜி.எஸ்.டி அமைப்பில் நுதனமாக மோசடி செய்த கோவை தொழிலதிபர்!

எளிதாக தொழில் செய்ய அரசு ஏற்படுத்திய ஜி.எஸ்.டி அமைப்பில் நுதனமாக மோசடி செய்த கோவை தொழிலதிபர்!

MuruganandhamBy : Muruganandham

  |  14 March 2021 2:09 AM GMT

போலி ரசீது மூலம் ரூ.40 கோடி அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ஒருவரை கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி மோசடி செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன. இவர்களை கண்டறியும் பணியில் ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

சேலம், கருர், கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ஜிஎஸ்டி கணக்குகளை பதிவு செய்த ஒருவர், பிளைவுட், செராமிக் என பல பொருட்களை விற்பனை செய்வதாக கணக்கு காட்டியுள்ளார்.

இவரது நிறுவனம் மூலம், பொருட்களை சப்ளை செய்யாமலேயே, ரூ.318 கோடி மதிப்புக்கு போலி ரசீதுகளை உருவாக்கி, தனது மற்ற நிறுவனங்கள் மூலம் ரூ.40 கோடிக்கு அளவுக்கு உள்ளீட்டு வரி கடனை பெற்று அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்த ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபபட்ட முக்கிய நபர், இன்னொரு நபருடன் கூட்டு சேர்ந்து பல ஜிஎஸ்டி கணக்குகளை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு கணக்கு மட்டுமே இவரது பேன் எண்ணில் உள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம், உள்ளீட்டு வரியை பெறுவதற்காக உறவினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள், காசோலைகள் மீட்கப்பட்டன. எளிதாக தொழில் செய்வதற்காக ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் அரசு ஏற்படுத்திய வசதியை தவறாக பயன்படுத்தி வரி மோசடியில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக, கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News