போலி வாக்காளர்களை கண்டறிய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு- மத்திய அரசு!
By : Shiva
ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதால் குளறுபடி ஏற்படுவதைத் தடுப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அதை வைத்து பல இடங்களில் கள்ள ஓட்டுகள் போடுவதில் சில அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்ய முடியும் என்று முடிவு செய்தது.
இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு சட்ட திருத்தம் தேவை என்று அறிவுறுத்தியது. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சட்டத்திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் கொடுத்த யோசனை பரிசீலனையில் இருப்பதாகவும் ஆதார் எண்ணை இணைத்தால் வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.