Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் பயணிகளின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை: வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்!

பெண் பயணிகளின் பாதுகாப்பு  வழிகாட்டு நெறிமுறை: வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 March 2021 10:50 AM GMT

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். இதில் 20 சதவீதத்தினர், அதாவது 46 லட்சம் பேர் பெண் பயணிகள்.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ரயில்வே அமைச்சகத்தின் அந்த புதிய வழிகாட்டுதல்கள் வருமாறு,


பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை குறுகிய கால திட்டம், நீண்டகால திட்டம் என வகைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். சந்தேக நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, ரோந்து மேற்கொள்வது போன்றவை குறுகிய கால திட்டங்கள். ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது போன்றவை நீண்டகால திட்டங்கள் ஆகும்.

ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், அணுகுசாலைகள், டெப்போக்கள் போன்ற இடங்களில் மின்விளக்கு வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்கள், பயன்பாடற்ற கட்டிடங்கள் இருந்தால் பொறியியல் துறையுடன் கலந்து ஆலோசித்து அவற்றை இடித்துத் தள்ள வேண்டும்.

அவை இடிக்கப்படும்வரை அந்தக் கட்டிடங்களில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும் .ரயில் நிலையத்தின் ஓரமாக ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் யார்டு பகுதிகளில் தேவையில்லாத புல் பூண்டுகளை அகற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பயணிகள் காத்திருப்பு அறைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அடையாள அட்டை அணியாமல் ரயில்வே ஊழியர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது.


பெண்களுக்கு ஏதேனும் இன்னல்கள் நேர்ந்தால் அதுகுறித்து காலதாமதம் இன்றி புகார் அளிப்பதற்கு ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உதவ வேண்டும். பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளை நடத்தலாம். கண்காணிப்பு கேமராக்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும். யார் யார் வந்து சென்றனர் என்பதை தெளிவாக பார்க்கும் வசதியை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் ரயில்பெட்டி நிற்கும் இடத்தில் பிளாட்பாரத்தையொட்டி கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும். இதற்கு முன்பு ரெயில்நிலையங்களில் பாலியல் குற்றங்கள் நடந்த இடங்களை போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அத்தகைய குற்றவாளிகளின் தரவுகளை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

ஓடும் ரயில்களில் பாதுகாவலர்கள் இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக கழிவறையை ஒட்டிய பகுதியில் கூட்டம் சேராமல் தடுக்க வேண்டும். பாதுகாவலர்கள் பெண் பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

ரயில் உள்ளே நுழையும்போதும், வெளியேறும்போதும்தான் குற்றவாளிகள் கீழே குதித்து தப்பி ஓடுவார்கள் என்பதால் இந்த நேரத்தில் பாதுகாவலர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, போலீஸ் உதவி, சட்ட ஆலோசனை, வழக்கு மேலாண்மை, உளவியல் மற்றும் சமூக ஆலோசனை, தற்காலிக தங்குமிடம் போன்ற அனைத்தும் ஒன்றாக கிடைக்கும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News