பா.ஜ.க.விற்கு எங்களின் முழு ஆதரவு - கோவில் பூசாரிகள் சங்கம் அதிரடி!
By : Shiva
கோவில் பூசாரிகள் பேரவை வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பல்வேறு ஆதரவுகள் குவிய தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவில் பூசாரிகள் பேரவை தங்களின் ஆதரவை அளித்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது கோவில் பூஜை பொருள்களுக்கு வரி விலக்கு, அமர்நாத் மற்றும் கயிலாய யாத்திரை செல்வதற்கு மானியம், பூஜை செய்யும் கோவிலுக்கு அருகே இருக்கும் இடத்தில் பூசாரிகளுக்கு இலவச வீடு, மாதாந்திர உதவித்தொகை, பூசாரிகள் நல வாரியத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அளித்துள்ளதால் பூசாரிகள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டனர்.
ஏற்கனவே இந்துக்கள் வரும் செவ்வாய்கிழமை கடவுளுக்கு உகந்ததாக கருதப்படும் இலை, தாமரை மற்றும் மாம்பழத்தால் நைவேத்யம் செய்ய வேண்டும் என்றும் இந்துக்கள் அனைவரும் ஓரணியாக இருந்து இந்த கூட்டணியை வெற்றி பெற செய்து இனி இந்துக்களை பற்றி இழிவாக பேசுவதற்கு அரசியல் கட்சிகள் யோசிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது சமூகவலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. தற்போது பூசாரிகளும் தங்களின் ஆதரவை பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.